வியாச முனிவரிடம் ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். அவனது பணிவிடைகளால் வியாசரும் மிகவும் மகிழ்ந்து போனார்.
ஒரு நாள் ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதற்காக அந்த சீடன் காட்டிற்குள் சென்ற போது ஒரு முனிவரை சந்திக்கிறான். முக்காலமும் அறிந்த முனிவரான அவர், அவனை முன்னே செல்ல விட்டு 'இவன் எவ்வளவு பணிவிடைகள் செய்தாலும் அவனது குருவினாலேயே (வியாசர்) அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்பது விதி என்று கூறிச் செல்கிறார்.
அதைக் கேட்டுவிட்ட அந்த சீடனுக்கு அன்றிலிருந்து மனசே சரி இல்லாமல் முக வாட்டத்துடனேயே திரிந்தான் . ஆனால் அவன் குருவிற்கு செய்ய வேண்டியவைகளை எப்போதும் போல செய்து வந்தான். அவனது முகவாட்டத்தைக் கண்ட வியாசர் அவனிடம் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் கூற மறுத்த சீடன் பிறகு குருவின் கட்டளையின் பேரில் காட்டில் நடந்தவைகளைக் கூறினான்.
அதைக்கேட்டு விட்டு பலமாகச் சிரித்த வியாசர், இதற்காகவா இவ்வளவு வருத்தம், நீ ஒன்றும் கவலைப்படாதே , நான் அந்த விதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி அவனை சமாதனம் செய்தார். பிறகு நேராக எமலோகம் சென்று எமதர்மனிடம் ஆயுள் நிர்ணயம் செய்து வைக்கும் சுவடியைக் கேட்டார். அவனும் மறுக்காமல் சுவடியை சித்திரகுப்தனிடம் இருந்து எடுத்துக் கொடுக்க அதில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்க, அவர் சீடனின் பக்கம் வந்ததும் அதில் உள்ளவைகளைப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது,
" என்றைக்கு வியாச முனிவரானவர் பூலோகத்தில் இருந்து எமலோகம் வந்து எமதர்மனிடம் சுவடியை வாங்கி இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்கிறாரோ , அன்று இவனுக்கு மரணம் சம்பவிக்கும்"
(நடக்க இருப்பதை ஒரு போதும் தடுத்து விட முடியாது.)
- இரா. முத்துப்பாண்டியன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக