Earn Money - பணம் சம்பாதிக்க

சனி, 31 ஜனவரி, 2009

கடவுளைக் காண உதவும் கண்ணாடி

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மிடுக்கும், சொல் துடுக்கும் உடைய மாணவன் சென்றான்.
"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கலாமே'' என்றான்."தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் இல்லை. நூலறிவு படைத்தவன். கடவுள், கடவுள் என்று நீங்கள் கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''"தம்பீ! காண முயலுகின்றேன்.''"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''"இல்லை.''"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் நுகர்ந்திருக்கின்றீரா?''"இல்லை.''"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை; கையால் தொட்டதில்லை; காதால் கேட்டதில்லை; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு இந்த அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்திருந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம் போன்றவர்களைக் காட்சிச் சாலையில்தான் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?''"தேன் பாட்டில்.''"தேன் இனிக்குமா, கசக்குமா?'"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்காக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று கேட்கின்றீரே! உணவுப் பொருள்களிலேயே தேன் முக்கியமானது. இது அருந்தேன், இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காகத்தான் இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.''"தம்பீ! தித்திக்கும் என்றாயே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா? சற்று விளக்கமாகக் கூறு! நீதான் நன்கு படித்த அறிஞனாச்சே!.''மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்."ஐயா! தேனின் இனிமையை எப்படச் சொல்வது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவன்தான் உணர்வான்.''பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்த மருத்துவப் பொருளாகவும் உணவாகவுமுள்ள தேனின் இனிமையையே சொல்ல முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றாயே? ஞானப் பொருளாக, அனுபவப்பொருளாகவும் விளங்கும் இறைவனை அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்."தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''-என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.மாணவன் வாய் சிறிது அடங்கியது.
"பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் பேசுகிறேன்.''"தம்பீ! சற்று நில். பசி என்றாயே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா?''
"இல்லை.''"என்ன தம்பீ! உன்னைப் படித்த அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை, கையால் தொட்டதில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று சொல்லி உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று இல்லவே இல்லை. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அனுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அனுபவப் பொருள். அதைத் தவம் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.''மாணவன் உடம்பு வியர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்."என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம்! கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?''"என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''"ஆம்! தெரிகின்றன.''"முழுவதும் தெரிகின்றதா?''
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''மாணவன் விழித்தான்."ஐயா! பின்புறம் தெரியவில்லை.''"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே. சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.''"அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்."குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். ''"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்."தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''
அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.
-திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் குட்டிக்கதை.

2 கருத்துகள்:

  1. why god is not working to stop the fight in srilinka,palistine...

    may be earth is video game for god...and he is playing with humans

    பதிலளிநீக்கு
  2. rajabatcha praying to his god to save his country from LTTE...

    LTTE praying to his god to get freedom form rajabatcha....

    ISRAILE praying to his god save his countary from plaistine freedom fighters...

    palistine freedom fighters praying to his god to get freedom from israile....

    which god will win????

    பதிலளிநீக்கு